கொண்டமநாயக்கன்பட்டியில், குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள் - சுற்றுச்சூழல் பாதிப்பு

கொண்டமநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே காலிமதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
கொண்டமநாயக்கன்பட்டியில், குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள் - சுற்றுச்சூழல் பாதிப்பு
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டியை அடுத்த கொண்டமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தகடைகளில் பார் வசதி இல்லாத காரணத்தால் மதுப்பிரியர்கள் மதுவை வாங்கி திறந்தவெளியில் குடித்துவிட்டு பாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால், மதுவை வாங்கி அப்பகுதியிலேயே கூட்டம் கூட்டமாக அமர்ந்து குடித்துவிட்டு செல்கின்றனர்.

இதன்காரணமாக அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. மேலும் அந்த பகுதி முழுவதும் உடைக்கப்பட்ட மதுபாட்டில்கள் சிதறி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் கீழே கிடக்கும் கண்ணாடி துண்டுகள் குத்தி அடிக்கடி காயமடைந்து வருகின்றனர்.

மேலும் மதுகுடிப்பவர்கள் போதை ஏறிய பின்னர் மதுபாட்டில்களை தூக்கி எறிந்து செல்கின்றனர். இதன்காரணமாக மதுபாட்டில்கள் கேட்பாரற்று குவிந்து கிடக்கிறது. அந்த பகுதி முழுவதும் பாட்டில்களாக சிதறி கிடப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மக்கும் தன்மையற்ற மதுபாட்டில்களால் மண்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே டாஸ்மாக் கடைகள் அருகே குவிந்து கிடக்கும் மதுபாட்டில்களை அப்புறப்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com