கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய மராட்டியம் பாதிப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய மராட்டியத்தில், அந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய மராட்டியம் பாதிப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது
Published on

மும்பை,

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள ஆட்கொல்லி கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பில் மராட்டியம் தான் முதலிடத்தில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று மட்டும் மராட்டியத்தில் 3 ஆயிரத்து 7 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மாநிலத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது இது 2-வது தடவையாகும்.

இதனால் மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 975 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் முதலில் கண்டறிப்பட்ட சீனாவை மராட்டியம் மிஞ்சி உள்ளது. சீனாவில் இதுவரை சுமார் 83 ஆயிரம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மாநிலத்தில் நேற்று புதிதாக 91 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர். இதனால் மராட்டியத்தில் நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இதுவரை மாநிலத்தில் 3 ஆயிரத்து 60 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர்.

மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1,421 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 774 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 61 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதில் 42 பேர் ஆண்கள். 19 பேர் பெண்கள். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,638 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை நகரில் 21 ஆயிரத்து 196 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

மும்பையில் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிற போதும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு புதிதாக கொரோனா பாதிப்பால் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. நேற்று தாராவியில் புதிதாக 13 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இங்கு இதுவரை 1,912 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 71 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 4,861 (120 பேர் பலி), தானே புறநகர் - 1,167 (21), நவிமும்பை மாநகராட்சி - 3,484 (86), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 1,812 (34), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 499 (20), பிவண்டி மாநகராட்சி - 266 (11), மிரா பயந்தர் மாநகராட்சி - 925 (39), வசாய் விரார் மாநகராட்சி -1,275 (34), ராய்காட் - 740 (29),

பன்வெல் மாநகராட்சி - 701 (26). மாலேகாவ் மாநகராட்சி - 834 (68). புனே மாநகராட்சி - 8,388 (377), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 662 (14), சோலாப்பூர் மாநகராட்சி - 1,255 (98), அவுரங்காபாத் மாநகராட்சி - 1,918 (90), நாக்பூர் மாநகராட்சி - 697 (11).

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com