

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலை நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டு, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சி, தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 19 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 19 வேட்பாளர்களில் யாருக் கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் அதற்கு நோட்டா என்கிற பொத் தானை வாக்காளர்கள் அழுத்தலாம்.
சின்னம்- புகைப்படம் பொருத்தும் பணி
ஒரு மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் 16 சின்னங்கள் பொருத்தலாம். ஆனால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 19 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா உள்ளதால் ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள், சின்னங்களும், மற்றொரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 3 வேட்பாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள், சின்னங்களும் மற்றும் இவர்களில் எவருக்கும் வாக்காளிக்க விரும்பவில்லை என்பதனை குறிக்கும் நோட்டாவும் இடம் பெற்றுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திங்களில் வேட்பாளர்களின் பெயர், அவர்களது புகைப்படம் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னங்கள் பொருத்தும் பணி பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மும்முரமாக நடந்தது.
கலெக்டர் ஆய்வு
இதனை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 332 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள 332 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கூடுதலாக 64 என மொத்தம் 396 வாக்குப்பதிவு எந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படங்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணிகள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33 மண்டல அலுவலர்கள் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரத்தையும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்களிக்கும் போது வி.வி.பேட் எந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னம், பெயர் மற்றும் வரிசை எண் சரியாக உள்ளதா? என்பது குறித்தும் உறுதி செய்யப்பட்டது. இந்த பணி எறையூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ஜெய்னுலாபுதீன், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் சித்ரா (பெரம்பலூர்), கவிதா (வேப்பந்தட்டை), ஷாஜஹான் (ஆலத்தூர்), சிவா மற்றும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்தது.