நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தொகுதி முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு
Published on

நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. 24-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படுகிறது.

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் இருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான நடேசன் அல்லது நாங்குநேரி தாசில்தார் ரகுமத்துல்லா ஆகியோரிடம் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படி, தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் தலைமையில் நாங்குநேரி தொகுதியில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நேற்று நாங்குநேரி தாலுகா அலுவலகத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன், தாசில்தார் ரகுமத்துல்லா மற்றும் அலுவலர்கள் வந்தனர். அங்கு வேட்புமனுக்களை பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்தனர்.

இதுதொடர்பாக அதிகாரி நடேசன் கூறுகையில், வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும். அரசியல் கட்சியினர் ஊர்வலமாக வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருடன் வருகிறவர்கள் 100 மீட்டர் தூரத்துக்குள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். தாலுகா அலுவலகத்துக்குள் வேட்பாளர் மற்றும் அவருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதையொட்டி பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் நாங்குநேரி தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com