நாரணமங்கலம் செல்லியம்மன் கோவில் தேரோட்டத்தை நடத்த வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

நாரணமங்கலம் செல்லியம்மன் கோவில் தேரோட்டத்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் மனு கொடுத்தனர்.
நாரணமங்கலம் செல்லியம்மன் கோவில் தேரோட்டத்தை நடத்த வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி தேர் திருவிழா நடத்தி வருகிறோம். இந்நிலையில் ஒரு தரப்பினரை, சில அமைப்பினர் தூண்டி விட்டு, பாரம்பரியமாக நடைபெறும் தேர் திருவிழாவில் புதிய மாற்றம் கொண்டு வர முயல்கின்றனர். இதனால் நாங்களும், அந்த தரப்பினரும் தேர் திருவிழாவை முறையாக நடத்துவதற்கு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதற்கு கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு தேர் திருவிழாவினை நடத்த மாவட்ட நிர்வாகம் சுமுகமாக பேசி தீர்வு காண வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், எங்கள் தரப்பினர் கலந்து கொண்டு எங்களது கருத்துகளை தெரிவித்தோம். ஆனால் எதிர் தரப்பினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த ஆண்டிற்கான தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இரு தரப்பினரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். ஆனால் சில அமைப்பினர் தேரோட்டத்தை தொடர்ந்து தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வந்த செல்லியம்மன் கோவில் தேரோட்டத்தை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com