விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாம்

விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாம்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக மாவட்டம் முழுவதும் 1,700 போலீசார், தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் புயலால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 44 பேர் நேற்று காலை விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அதுபோல் சென்னையில் இருந்து தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 41 பேரும் விழுப்புரம் வந்துள்ளனர்.

கடலோர பகுதிகளில் முகாம்

இவர்கள் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான மரக்காணம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனித்தனி குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். இவர்கள் அவசர கால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், டயர் டியூப்கள், கயிறு, பொக்லைன் எந்திரம், ஜெனரேட்டர், மரம் வெட்டும் எந்திரங்கள், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

திண்டிவனம்

திண்டிவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், புயலின் போது ஏற்படும் சேதங்கள் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கூடுதல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் 27 மீட்புக்குழுவினர் திண்டிவனம் வந்தனர்.

இவர்களுக்கு, புயல் மற்றும் மழையால் சேதம் ஏற்படும் பகுதிகளுக்கு சென்று உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து கூடுதல் எஸ்.பி விவேகானந்தன் விளக்கினார். தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com