குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க: இயற்கை காய்கறி தோட்டங்கள் அமைக்க வேண்டும் - அங்கன்வாடி பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க இயற்கை காய்கறி தோட்டங்கள் அமைக்கவேண்டும் என்று அங்கன்வாடி பணியாளர்களை, கலெக்டர் திவ்யதர்ஷினி கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க: இயற்கை காய்கறி தோட்டங்கள் அமைக்க வேண்டும் - அங்கன்வாடி பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ச.திவ்யதர்ஷினி தலைமை தாங்கி, அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து மரக்கன்றுகளான நெல்லி, கொய்யா செடிகளை நட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரம் அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க இயற்கை முறையிலான காய்கறி தோட்டங்கள் அமைக்க அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட உள்ள காரணத்தினால் சத்துணவு சாப்பிடும் அனைத்து குழந்தைகளுக்கும் உலர் உணவுகள் மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இம்மாதம் முழுவதும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகளை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் ஆகியவற்றின் மூலமும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ராணிப்பேட்டை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக இருக்க பொதுமக்களுக்கு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் கோமதி, மகளிர் திட்ட இயக்குனர் ஜெயராம், மாவட்ட வழங்கல் அலுவலர் இளவரசி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார், நகராட்சி ஆணையாளர்கள், துறை அலுவலர்கள், அங்கன்வாடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com