

திருவாரூர்,
எந்தவித உரங்களையும் பயன்படுத்தாமல், எவ்வித பராமரிப்பும் இன்றி இயற்கையாகவே வளர்கிற பனை மரங்கள் பல வழிகளிலும் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன.
பனை மட்டைகளை கொண்டு தயாரிக்கப்படும் விசிறிகள் இதமான காற்றை தருகின்றன. பனை ஓலைகள் மூலம் வீட்டின் கூரைகள் வேயப்படுகின்றன. சுண்ணாம்பு, கால்சியத்துடன் புரோட்டின் சத்தும் நிறைந்தது பனை நுங்கு. இப்படி பல வழிகளில் பனை மரங்கள் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
திராவகம் ஊற்றி அழிப்பு
திருவாரூர் நகரில் புதிய பஸ் நிலையம் முதல் கலெக்டர் அலுவலகம் வரையிலும், விளமல் கல்பாலம் முதல் ஆயுதப்படை மைதானம் வரையிலும் சாலையின் இரு புறங்களில் பனை மரங்கள் ஓங்கி வளர்ந்து கம்பீரமாக காட்சி தருகின்றன.
இவற்றை அன்னாந்து பார்ப்பதே தனி அலாதி. இந்த நிலையில் திருவாரூர் விளமல் பகுதியில் மன்னார்குடி சாலையில் உள்ள பனை மரங்களை சில சமூக விரோதிகள் திராவகம் ஊற்றி அழித்து வருகின்றனர். திராவகம் ஊற்றப்படுவதால் பனை மரங்கள் சமீப காலமாக உருக்குலைந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜவேல் கூறுகையில், நெடுஞ்சாலைகளில் எந்த காலத்திலோ வைத்த பனை மரங்கள் இன்றும் நமக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறது. கோடை காலத்தில் பனை நுங்கினை ஆசைப்பட்டு வாங்கி சாப்பிடும் நாம், அந்த பனை மரத்தினை வளர்க்கவோ, புதிதாக நடுவதற்கோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை.
இந்த சூழ்நிலையில் திருவாரூரில் சாலையோரங்களில் இருந்த பனை மரங்களை திராவகம் ஊற்றி அழிப்பது வேதனைக்குரியது. மரங்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய, மாநில சாலைகளில் உள்ள பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.