நவராத்திரி விழா: தூத்துக்குடியில் அம்மன் சப்பரங்கள் ஊர்வலம்

நவராத்திரி விழாவையொட்டி தூத்துக்குடியில் அம்மன் சப்பரங்கள் ஊர்வலம் நேற்று இரவு நடந்தது.
நவராத்திரி விழா: தூத்துக்குடியில் அம்மன் சப்பரங்கள் ஊர்வலம்
Published on

நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தூத்துக்குடியில் உள்ள சந்தன மாரியம்மன், உச்சினி மாகாளியம்மன், பத்திர காளியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்து வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அனைத்து கோவில்களிலும் அம்மன்கள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் உள்ள சப்பரங்கள் மாநகரம் முழுவதும் நேற்று சுற்றி வந்தது. இதைத்தொடர்ந்து சப்பரங்கள் ஊர்வலம் நடந்தது. தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் முன்பு இருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தின் முன்பு பெண்கள் மாவிளக்கு ஏந்தி சென்றனர்.

ஊர்வலத்துக்கு கமிட்டி தலைவர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். ஊர்வலம் மெயின்ரோடு வழியாக தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு ஒன்றன்பின் ஒன்றாக வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பட்டு சாத்தி எதிர்சேவை நடந்தது.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சு.மாயகூத்தன், இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் சிவக்குமார், கமிட்டி பொருளாளர் இசக்கிமுத்து குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com