சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் நவநிர்மாண் சேனா?

மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் நவநிர்மாண் சேனா இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் நவநிர்மாண் சேனா?
Published on

மும்பை,

மராட்டியத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் கூட்டணியை உருவாக்க முயற்சி செய்தது. குறிப்பாக கொள்கை முரண்பாடுகளை தாண்டி நவநிர்மாண் சேனா கட்சியை இணைத்துக்கொள்ள தேசியவாத காங்கிரஸ் விருப்பம் தெரிவித்தது.

காங்கிரஸ் கட்சி இதை ஏற்றுக்கொள்ளாததால் நவநிர்மாண் சேனா கூட்டணியில் இணைய முடியவில்லை. திடீர் திருப்பமாக நாடாளுமன்ற தேர்தலில் நவநிர்மாண் சேனா போட்டியிடவில்லை. கூட்டணியில் சேர்க்க தயங்கிய காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் சேர்க்க ஆர்வம் காட்டிய தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் பாகுபாடு இன்றி நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே தீவிர பிரசாரம் செய்தார்.

இதன்மூலம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரசுடன் நவநிர்மாண் சேனா கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பார்க்க போனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராஜ்தாக்கரே கட்சி இடம்பெறப்போகிறது. அந்த கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து சில தொகுதிகளை வழங்கும் என கூறப்படுகிறது.

2009-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நவநிர்மாண் சேனா கட்சி 13 இடங்களில் வெற்றிபெற்றது. மேலும் கணிசமான வாக்கு சதவீதத்தையும் அக்கட்சி பெற்றது. ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலில் ஒரேஒரு தொகுதியை மட்டுமே அந்த கட்சியால் கைப்பற்ற முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com