

ஊட்டி,
மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். சமவெளி பகுதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் சுட்டெரிப்பதால், சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது.
அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களில் வருகிறார்கள். கோடை விடுமுறை என்பதால், பலர் குழு, குழுவாக வருவதை காண முடிகிறது. சுற்றுலா வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த ஊட்டி சேரிங்கிராசில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்.) வளாகம் மற்றும் ஆவின் வளாகத்தில் கட்டணம் அடிப்படையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தனியார் வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், அரசுக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகிறது.
இதற்கிடையே ஊட்டி என்.சி.எம்.எஸ். வாகன நிறுத்துமிடத்தை ரூ.2 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதுவரை அந்த பணிகள் முழுமை பெற வில்லை. இதனால் கடந்த பல நாட்களாக சுற்றுலா வாகனங்கள் வளாகத்துக்குள் நிறுத்த அனுமதிக்கப்பட வில்லை. அதன் காரணமாக வாகனங்கள் ஊட்டி-குன்னூர் சாலையில் உள்ள ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து சுற்றுலா பயணிகள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
இதையடுத்து கோடை சீசன் தொடங்கியும் என்.சி.எம்.எஸ். வாகன நிறுத்துமிடத்தை மேம்படுத்தும் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டது. தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை என்.சி.எம்.எஸ். வாகன நிறுத்திமிடத்தில் நிறுத்தி விட்டு நடந்து சென்று வருகிறார்கள். சீசன் என்பதால், அங்கு பஸ்கள், கார்கள், வேன்கள் அதிகமாக நிறுத்தப்பட்டு வருகின்றன.
மேம்படுத்தும் பணியின் போது வளாகத்தில் இருந்த கழிப்பறைகள் இடித்து அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக இதுவரை கழிப்பறை கட்டப்பட வில்லை. இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து ஊட்டியில் வந்து இறங்குகிறார்கள். அவர்கள் வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை வரிசையாக நிறுத்தி விட்டு, ஒவ்வொருவராக கீழே இறங்குகின்றனர். நீண்ட நேரம் பயணித்து வருவதால், அவர்கள் வந்த உடனேயே கழிப்பறை எங்கே இருக்கிறது என்று தேடி அலைகின்றனர்.
சிலர் அங்கேயே திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்கின்றனர். பெண்கள், வயதானவர்கள் கழிப்பறை வசதி இல்லாததால் கடுமையாக அவதி அடைந்து வருகிறார்கள். எனவே, சுற்றுலா பயணிகளுக்காக அங்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடைகள் கட்டுவது, இன்டர்லாக் கற்கள் பதிப்பது போன்ற பணிகளை விரைவில் முடித்து முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.