ஆம்பூர் அருகே வியாபாரி வீட்டில் ரூ.5½ லட்சம் நகை, பணம் கொள்ளை

ஆம்பூர் அருகே வியாபாரி வீட்டின் ஜன்னல் கம்பிகளை கழற்றி உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.5½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிவிட்டு தப்பியுள்ளனர்.
ஆம்பூர் அருகே வியாபாரி வீட்டில் ரூ.5½ லட்சம் நகை, பணம் கொள்ளை
Published on

ஆம்பூர்,
ஆம்பூர் அருகே துத்திப்பட்டில் உள்ள ஈத்கா பகுதியில் வசித்து வருபவர் அஸ்லம்பாஷா (வயது 30). வியாபாரியான இவர் ஆம்பூர் நேதாஜி ரோட்டில் கடை வைத்துள்ளார். உடல்நலக்குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு 5 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை அஸ்லம்பாஷாவின் வீட்டு ஜன்னல் கண்ணாடி மற்றும் இரும்பு கம்பிகள் கழற்றி கீழே வைக்கப்பட்டிருந்தன. அருகில் உள்ளவர்கள் இதனை பார்த்து விட்டு அஸ்லம்பாஷாவின் குடும்பத்தினருக்கும் உமராபாத் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

அதன்பேரில் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். கதவை திறந்து உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 23 பவுன் நகை மற்றும் ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஜன்னல் கண்ணாடி மற்றும் கம்பிகளை கழற்றி வைத்து, அதன் வழியாக வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பீரோ மற்றும் கதவில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

அடிக்கடி நடக்கும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே கொள்ளை கும்பலை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com