அந்தியூர் அருகே தீ விபத்து கோழி–புறாக்கள் கருகி சாவு

அந்தியூர் அருகே தீ விபத்தில் கோழி, புறாக்கள் கருகி செத்தன.
அந்தியூர் அருகே தீ விபத்து கோழி–புறாக்கள் கருகி சாவு
Published on

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பட்லூர் கெம்மியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மனைவி மைனா. இவர்கள் சமையல் செய்வதற்காக தங்களது வீட்டின் முன்பு குடிசை அமைத்துள்ளனர். இந்த குடிசையின் அருகே குணசேகரன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. அந்த கோழிப்பண்ணை ஓலை கீற்றுகளால் வேயப்பட்டு தகரத்தால் மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு ஏராளமான கோழிகள், புறாக்கள் மற்றும் காடைகள் அடைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை மைனா குடிசையில் இருந்த விறகு அடுப்பில் சமையல் செய்தார். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தில் அடுப்பில் இருந்த தீ கனல் பறந்து குடிசையின் மீது விழுந்தது. இதில் குடிசை தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ கோழி பண்ணைக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

எனினும் இந்த தீ விபத்தில் குடிசை முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. இதில் உள்ளே இருந்த சமையல் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. பண்ணையில் இருந்த கோழிகள், புறாக்கள், காடைகள் கருகி இறந்தன.

இதன் சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com