ஆண்டிப்பட்டி அருகே: கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது- சர்வதேச கும்பலுடன் தொடர்பா?

ஆண்டிப்பட்டி அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆண்டிப்பட்டி அருகே: கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது- சர்வதேச கும்பலுடன் தொடர்பா?
Published on

கண்டமனூர்,

தேனி மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பம் நகரில் கள்ள நோட்டு கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தை கத்தையாக கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இந்தநிலையில் ராஜதானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் போலீசார் கதிர்நரசிங்கபுரம் கால்நடை மருத்துவமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பையுடன் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர் களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த ரூபாய் நோட்டுகள் சற்று வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து அவற்றை சோதனை செய்தபோது அவை கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ராஜதானி அருகே உள்ள வீரசின்னம்மாள்புரம் பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 38), பழனிகுமார் (21), வசந்தகுமார் (30), ஜக்கம்மாள்பட்டியை சேர்ந்த பால்ராஜ் (36) என்பதும், கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, கைது செய்யப்பட்ட குமரேசன், திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு, கோவையை சேர்ந்த சுந்தரம் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆகினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக 2 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக குமரேசனிடம், சுந்தரம் கொடுத்துள்ளார். குமரேசன் இந்த கள்ள ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது என்பது குறித்து ஊருக்கு வந்து தனது நண்பர்களான வசந்தகுமார், பழனிகுமார், பால்ராஜ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதன்படி முதற்கட்டமாக அவர், நண்பர்கள் 3 பேரிடமும் ரூ.56 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து புழக்கத்தில் விட்டுள்ளார். மீதமுள்ள பணத்தை மாற்றுவது குறித்து கதிர்நரசிங்கபுரம் கால்நடை மருத்துவமனை அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

மேலும் அவர்கள் யார், யாரிடம் பணத்தை புழக்கத்தில் விட்டனர். இவர்களுக் கும், சர்வதேச கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடும் கும்பலுக்கும் தொடர்பு இருக் கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து தொடர் விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர். கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com