ஆரணி அருகே குளத்தை முறையாக தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

ஆரணி அருகே குளத்தை முறையாக தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி அருகே குளத்தை முறையாக தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
Published on

ஆரணி,

ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் தாமரை குளம் உள்ளது. இந்த குளத்தில் கழிவுநீர் கலக்கிறது. மேலும், குளம் தூர்ந்து போனதால் அதை சீரமைக்க தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று முன்வந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பொக்லைன் எந்திரத்தை இயக்கும் டிரைவரையும், மணலை அப்புறப்படுத்தும் டிராக்டர்களை இயக்கும் டிரைவர்களையும் ஒரு பிரிவினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்தும், குளத்தில் கழிவு நீர் கலப்பது குறித்தும் அந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் தலைமையில் பொதுமக்கள் திரண்டு, குளத்தை தூர்வார வந்த பொக்லைன் மற்றும் டிராக்டர் டிரைவர்களிடம், நீங்கள் குளத்தை முறையாக தூய்மை செய்ய வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுத்து, பின்னர் தூர்வார வேண்டும் என்று கூறி, குளம் அருகே உள்ள ஆரணி- வாழப்பந்தல் சாலையில் திடீரென மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், திலகவதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட சரவணன் உள்பட 100 பேர் மீது ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com