

பாகூர்,
பாகூர் அருகே குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆசாத் (வயது 24). இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (25), செல்வநந்தன் (24). இவர்கள் 3 பேரும் தீபாவளி அன்று சோரியாங்குப்பத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்தனர்.
அங்கு அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், தியாகராஜன், பாலகிருஷ்ணன், விஜி ஆகியோர் மது குடித்தனர். இவர்களுக்கும், ஆசாத் தரப்பினருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆசாத் மற்றும் அவரது நண்பர்கள் வீடு திரும்பினர்.
ஆனால் ஆத்திரம் தீராத அருண்குமார் தரப்பினர் இரும்பு குழாய், உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன் ஆட்டோவில் குருவிநத்தம் பெரியார் நகருக்கு வந்தனர். அவர்கள் வீடு புகுந்து ஆசாத், விஜயகுமார், செல்வநந்தன் ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் ஆசாத்துக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
மதுக்கடையில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து ஊருக்குள் புகுந்து வாலிபர்களை தாக்கிய அருண் குமார் தரப்பினரை கைது செய்யக்கோரி பெரியார்நகர் மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.