

சாத்தூர்,
சாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் மொத்த விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று சாத்தூர் அருகே பெரியகொல்லபட்டியில் உள்ள குடோனில் அதிக அளவில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இருக்கன்குடி போலீசார் அந்த பகுதியில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தினார்கள். சோதனையில் நென்மேனியை சேர்ந்த சரவணமணிகண்டனுக்கு(வயது 31) சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சரவணமணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.