

செங்கல்பட்டு,
செங்கல்பட்டை அடுத்த பெரிய மேலமையூர் கிராமம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 58). இவரது எதிர் வீட்டைச் சேர்ந்தவர் ராகிணி (60). இரு பெண்களும் தினமும் மாலை நேரத்தில் வீட்டின் முன்பக்கத்தில் இருந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
இதேபோன்று நேற்று மாலை செல்வம், தனது வீட்டின் முன்பகுதியில் இருந்து ராகிணியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இரவு 7 மணி அளவில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து இவர்களது தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு கந்தன், தாலுகா போலீசார் மற்றும் செங்கல்பட்டு தாசில்தார் பாக்யலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பலியான 2 பெண்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அந்த வீடு 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதால் பாரம் தாங்காமல் மேற்கூரை இடிந்து விழுந்ததா? அல்லது தற்போது பெய்த மழையால் இடிந்து விழுந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான ராகிணிக்கு ஒரு மகனும், 3 மகளும் உள்ளனர். இறந்து போன செல்வத்திற்கு ஒருமகன் உள்ளார்.