சின்னமனூர் அருகே குளத்தில் தண்ணீர் திருட்டு

சின்னமனூர் அருகே குளத்தில் தண்ணீர் திருடப்படுவதால் பாசனத்துக்கு கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.
சின்னமனூர் அருகே குளத்தில் தண்ணீர் திருட்டு
Published on

சின்னமனூர்,

சின்னமனூர் அருகே சீலையம்பட்டி சமத்துவபுரம் சாலையோரத்தில் கருத்த குடும்பன் குளம் உள்ளது. இந்த குளத்தால், 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதில் அந்த குளம் முக்கிய பங்கு வகிக்கிறது.

முல்லைப்பெரியாற்றில் இருந்து பிரிந்து வருகிற பி.டி.ஆர். கால்வாயில், வருடந்தோறும் காந்தி பிறந்தநாளான அக்டோபர் மாதம் 2-ந்தேதி திறந்து விடப்படுகிற தண்ணீர் 6 மாத காலத்துக்கு இந்த குளத்தில் தேக்கி வைக்கப்படும். இந்த தண்ணீர் மூலம், அதனை சுற்றியுள்ள வயல்களில் விவசாயிகள் நெல்நடவு செய்வார்கள்.

இந்த ஆண்டு 1 மாதம் மட்டுமே குளத்துக்கு தண்ணீர் வந்தது. இதனால் விவசாயிகள் நெல் நடவு செய்யாமல், மானாவாரி பயிர்களை பயிரிட்டனர்.

இந்தநிலையில் தற்போது வரை கருத்தகுடும்பன் குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை, மின்மோட்டார் மூலம் உறிஞ்சி சிலர் திருடி வருகின்றனர். அந்த தண்ணீர், சின்னமனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தண்ணீர் திருட்டு தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல் நாளுக்குநாள் குளத்தை சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 8 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக குளம் இருந்தது.

ஆனால் தற்போது 3 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் போதுமான அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றவும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே குளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் திருடுவோர் மீதும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com