

பந்தலூர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூடலூர் கிளையில் இருந்து தினமும் மதியம் 1.10 மணிக்கு சுல்தான்பத்தேரிக்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பஸ் கூடலூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு அய்யன்கொல்லிக்கு செல்கிறது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கூடலூருக்கு இயக்கப்படுகிறது.
இந்த பஸ்சின் முன்பக்க படிக்கட்டு பகுதி உடைந்து இருந்ததால், அந்த பகுதி கதவு வைத்து வெல்டிங் மூலம் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து மோசமாக காட்சி அளிக்கிறது. பழுதடைந்த இந்த பஸ்சை மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் 1.15 மணிக்கு கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரிக்கு அந்த அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ரவிச்சந்திரன் ஓட்டினார். பஸ்சில் கண்டக்டர் விஜயக்குமார் மற்றும் பயணிகள் இருந்தனர். மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், படிக்கட்டில் மாணவர்கள் சிலர் நின்று கொண்டு பயணித்தனர். தேவாலா கைதக்கொல்லி அருகே சென்றபோது, திடீரென பஸ்சில் வெல்டிங் வைத்து அடைக் கப்பட்ட கதவு மற்றும் படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்தது.
அப்போது படிக்கட்டில் நின்று பயணித்த கூடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் ரகமத்துல்லா(வயது 20), ஆசிப்(20) ஆகியோர் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மேப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.