தர்மபுரி அருகே பரபரப்பு: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நில மீட்பு போராட்டம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தர்மபுரி அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நிலம் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தர்மபுரி அருகே பரபரப்பு: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நில மீட்பு போராட்டம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை
Published on

தர்மபுரி,

தர்மபுரி தாலுகா உங்கரானஅள்ளி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 78 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் கடந்த 2011-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த பட்டாக்களுக்கு உரிய நிலத்தை அளவீடு செய்து வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. நிலத்தை அளவீடு செய்து வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாய சாகுபடி பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கும் போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் டில்லிபாபு, மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் மாதையன், பொருளாளர் கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அர்ச்சுனன், மாவட்ட செயலாளர் முத்து, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராஜன், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஜெயா, மாவட்ட செயலாளர் கிரைசாமேரி உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள், செடி, கொடிகளை போராட்ட குழுவினர் அகற்றினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன், தனி தாசில்தார் அன்பு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து பயனாளிகளிடம் வழங்குவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com