திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் வீசப்பட்ட 10 கள்ளத்துப்பாக்கிகள்

திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் வீசப்பட்ட 10 கள்ளத்துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் வீசப்பட்ட 10 கள்ளத்துப்பாக்கிகள்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை, தவசிமடை உள்ளிட்ட பகுதிகளில் சிலர் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்பேரில் போலீசார், வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். அப்போது கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தவசிமடை அருகே வனப்பகுதியில் 14 கள்ளத்துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடந்தன. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரின் எச்சரிக்கையின் பேரில் கள்ளத்துப்பாக்கிகளை வீசிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவ்வப்போது வனப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று காலை தவசிமடை அருகே வனப்பகுதியான சிறுமலை ஓடை பகுதியில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், சிறுமலை வனச்சரகர் மனோஜ் மற்றும் போலீசார், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 10 கள்ளத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு துப்பாக்கி பேரல் (துப்பாக்கி குழல்) ஆகியவை கேட்பாரற்று கிடந்தன. இதையடுத்து அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். அதில், போலீசாரின் எச்சரிக்கையின் பேரில் கள்ளத்துப்பாக்கிகளை வீசி சென்றது தெரிய வந்தது.

திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே நத்தம் அருகேயுள்ள மலையூர், கரந்தமலை, கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர், கூக்கால், பூண்டி, கே.சி.பட்டி மற்றும் பாச்சலூர் ஆகிய மலைக்கிராமங்களில் சிலர் உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே, அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com