

பேரையூர்,
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 70). ஆடு மேய்த்து வருகிறார். அவர் நேற்று காலை தனது ஆடுகளை அங்குள்ள வயல் வரப்புகளில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு பின்னர் அவற்றை தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க வைத்துள்ளார்.
தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் 18 ஆடுகளும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தன. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் வி.சத்திரப்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தண்ணீர் தொட்டியின் அருகில் யூரியா உரங்கள் சிதறிக் கிடந்துள்ளன.
இது குறித்து துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து, தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆடுகளின் உடல்கள் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.