கோபி அருகே ‘செங்கல் சூளையில் எங்களை கொத்தடிமைகளாக வைத்துள்ளனர்’

கோபி அருகே உள்ள ‘செங்கல் சூளையில் எங்களை கொத்தடிமைகளாக வைத்துள்ளனர்’ என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரிடம் தம்பதியினர் புகார் மனு கொடுத்தனர்.
கோபி அருகே ‘செங்கல் சூளையில் எங்களை கொத்தடிமைகளாக வைத்துள்ளனர்’
Published on

ஈரோடு,

கோபி அருகே உள்ள அரசூர் நாயக்கன்புதூர் பகுதியை சேர்ந்த வளர்மதி (வயது 23), தன்னுடைய கணவன் சசிக்குமார் மற்றும் மகள்கள் நித்யா (5), சாரதா (4) ஆகியோருடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
நாங்கள் கோபி அருகே குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறோம். நாங்கள் வேலைக்கு சேரும் போது செங்கல் சூளை உரிமையாளர், எங்களுக்கு தினக்கூலியாக ரூ.1,000 தருகிறோம் என்று கூறினார். ஆனால் இப்போது எங்கள் 2 பேருக்கும் ரூ.500 மட்டுமே தருகிறார்கள்.

நாங்கள் வேலைக்கு சேர்ந்தபோது ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தோம். இந்த தொகையையும் நாங்கள் முழுமையாக செலுத்தி விட்டோம். தற்போது குறைந்த சம்பளம் தருவதால் எங்களால் குடும்பம் நடத்த முடியவில்லை. எனவே நாங்கள் செங்கல் சூளையை விட்டு வெளியே சென்று வேறு வேலைக்கு செல்லலாம் என்று நினைத்தால் உரிமையாளர் வெளியே செல்லவிடாமல் எங்களை கொத்தடிமைகளாக வைத்துள்ளார்.

மேலும் அவர் நாங்கள் வெளியே சென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியும் வருகிறார். இதனால் நாங்கள் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டோம். எனவே எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் செங்கல் சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com