

வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் தனியார் ஐ.டி. நிறுவனத்தின் மூலம் அடுக்குமாடி நிறுவனம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் ராட்சத கிரேன் மூலம் 13வது மாடி கட்டும் பணி நடைபெற்றது.
அப்போது திடீரென சுமார் 170 அடி உயரத்தில் இருந்து ராட்சத கிரேன் அறுந்து கட்டிடத்தின் அருகே உள்ள ஐ.டி.பார்க் சாலையில் விழுந்தது. கிரேன் அறுந்து விழுவதை பார்த்த ஊழியர்கள் மற்றும் சாலை ஒரமாக நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
கிரேன் விழும் போது ஐ.டி.பார்க் சாலையில் எந்த வாகனங்களும் செல்லவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த நேரத்தில் வாகனங்கள் ஏதாவது வந்து இருந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு இருக்கும். எனினும் கிரேன் விழுந்த போது அருகில் இருந்த ஒரு வேனின் பின்பகுதி லேசாக நசுங்கியது. மேலும் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் ஐ.டி.பார்க் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.