கடம்பூர் அருகே சொத்து பிரச்சினையில் பயங்கரம்: விவசாயி சரமாரி வெட்டிக்கொலை - உறவினர்கள் 3 பேர் கைது

கடம்பூர் அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடம்பூர் அருகே சொத்து பிரச்சினையில் பயங்கரம்: விவசாயி சரமாரி வெட்டிக்கொலை - உறவினர்கள் 3 பேர் கைது
Published on

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே வீரபாண்டிய புலிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மந்திரம் (வயது 80), விவசாயி. இவருடைய மனைவி காளியம்மாள். இவர்களுக்கு சண்முகராஜ், முருகன் ஆகிய 2 மகன்களும், வேலுத்தாய், வெயிலாட்சி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். எனவே, மந்திரம் தன்னுடைய மனைவியுடன் சொந்த ஊரில் தனது வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவில் மந்திரம் வழக்கம்போல் தனது வீட்டின் வெளிப்புற திண்ணையில் படுத்து தூங்கினார். மனைவி காளியம்மாள் வீட்டுக்குள் சென்று தூங்கினார்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள், வீட்டின் வெளிப்புற திண்ணையில் தூங்கி கொண்டிருந்த மந்திரத்தை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, கைகள், வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மந்திரம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

மந்திரத்தின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த மனைவி காளியம்மாள் வீட்டின் வெளியே வந்த பார்த்தபோது, அங்கு கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து கதறி அழுதார். உடனே, அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட மந்திரத்தின் உட லைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு.

கொலை செய்யப்பட்ட மந்திரத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் 2 வீடுகள் உள்ளன. எதிரெதிரே அமைந்துள்ள அந்த வீடுகளில் ஒரு வீட்டை கோவில்பட்டியைச் சேர்ந்த உறவினரான கோமதி என்ற மக்காளி மனைவி பாலம்மாள் என்பவர் உரிமை கொண்டாடி வந்தார்.

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. சொத்து பிரச்சினை தொடர்பாக, கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதில் மந்திரத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்காளியின் மகன் ஆறுமுகபாண்டி (35), உறவினர்களான கோவில்பட்டி சுயம்புலிங்க நகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் கட்டமணி (29), கடம்பூர் அருகே காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த ராமராஜ பாண்டியன் மகன் மகாராஜன் (29) ஆகிய 3 பேரும் சேர்ந்து மந்திரத்தை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகபாண்டி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடம்பூர் அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com