கடையநல்லூர் அருகே பரிதாபம் பிளஸ்-1 மாணவர் கிணற்றில் மூழ்கி சாவு

கடையநல்லூர் அருகே பிளஸ்-1 மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கடையநல்லூர் அருகே பரிதாபம் பிளஸ்-1 மாணவர் கிணற்றில் மூழ்கி சாவு
Published on

கடையநல்லூர்,

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மகன் குருசாமி (வயது 16). இடைகாலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் குருசாமி தனது நண்பர்களுடன் அட்டகுளம் கீழ்புறம் ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார்.

அங்கு அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குருசாமி திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குருசாமியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் உடனே அவர்கள் விரைந்து சென்று இதுபற்றி தங்கள் குடும்பத்தினரிடமும், குருசாமியின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதனைக் கேட்டு பதறித் துடித்த குருசாமியின் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி அறிவழகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்சீர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசாரும் விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் தீயணைப்பு படையினர் இறங்கி, தண்ணீருக்குள் மூழ்கிய குருசாமியை தேடினர்.

வெகு நேர போராட்டத்துக்கு பிறகு, இரவு 8 மணி அளவில் குருசாமியை பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மகனின் உடலை பார்த்ததும் அவரது பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்த அனைவரது கண்களையும் குளமாக்கியது. இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நீச்சல் தெரியாததால் குருசாமி தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் இறந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com