

பந்தலூர்,
பந்தலூர் தாலுகா கையுன்னி அருகே போத்துகுளி கொட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 63). இவருடைய மனைவி சுலோச்சனா (58). இவர் நேற்று முன்தினம் இரவு சமையல் அறையில் கியாஸ் அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்த கணவன், மனைவி 2 பேரும் தங்களது கால்நடைகளுக்கு பசுந்தீவனம் வழங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டு சமையல் அறையில் திடீரென பயங்கர தீ பரவியது. இதை கண்ட பாஸ்கரன், அவரது மனைவி சுலோச்சனா ஆகியோர் தண்ணீரை ஊற்றியதோடு, மண்ணை வாரி வீசினர்.
அப்போது திடீரென கியாஸ் சிலிண்டர் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் சமையல் அறை இடிந்து விழுந்தது. மேலும் அதன் கூரையும் சரிந்தது. இந்த விபத்தில் பாஸ்கரன், சுலோச்சனா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து பாஸ்கரன், சுலோச்சனாவை மீட்டு கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த எருமாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.