

கள்ளக்குறிச்சி,
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி தேர்தல் பறக்கும் படை அலுவலர் அன்பழகன் தலைமையிலான குழுவினர் நேற்று கள்ளக்குறிச்சி அருகே விருகாவூரில் கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 500 இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரியில் வந்த சின்னசேலத்தை சேர்ந்த நெல் வியாபாரியான பரமசிவம்(50) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சின்னசேலம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்லை விற்றுவிட்டு, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்ததும், அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பரமசிவத்திடம் இருந்த ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 500-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர்.