

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம், பனங்குடி-கல்லல் ரயில் நிலையத்துக்கு இடையே மணிமுத்தாறு ஆற்றுப்பாலத்தில் உள்ள தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காரைக்குடி ரயில்வே போலீசார் மற்றும் பணியாளர்கள் பழுது நீக்கும் எந்திரத்துடன் மதியம் 1 மணிக்கு அங்கு சென்றனர். சுமார் 5 மணி நேரம் இந்த பணி நடந்தது.
இந்தநிலையில், மானாமதுரையிலிருந்து மதியம் 2 மணிக்கு மன்னார்குடி பயணிகள் ரயில் புறப்பட்டு வந்தது. அந்த ரெயில் பனங்குடி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோன்று, ராமேசுவரத்திலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் மாலை 5.15 மணிக்கு சிவகங்கைக்கு வந்தது. பின்னர் அந்த ரெயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டவாளம் பழுது நீக்கிய பிறகு இந்த 2 ரெயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.