கண்ணமங்கலம் அருகே, ஓய்வு பெற்ற ஆசிரியை கொடூர கொலை-பிணம் எரிப்பு

கண்ணமங்கலம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையை கொடூரமாக கொலை செய்த மர்மநபர்கள் மின்சாரம் தாக்கி இறந்ததுபோல் சம்பவம் நடந்ததாக மாற்றும் வகையில் உடலையும் எரித்த பயங்கரம் நடந்துள்ளது.
கண்ணமங்கலம் அருகே, ஓய்வு பெற்ற ஆசிரியை கொடூர கொலை-பிணம் எரிப்பு
Published on

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் முனியந்தாங்கல் கூட்ரோடில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பின்புறம் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தவர் லூர்து மேரி (வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடும் வழக்கத்தை இவர் கொண்டிருந்தார். ஆனால் நேற்று காலை இவரது வீடு வெகுநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது பிணவாடை வீசியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்- இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது லூர்துமேரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடலும் எரிக்கப்பட்டிருந்தது. அருகில் மின்வயரும் கிடந்தது. இதனால் கொலையாளிகள் தாங்கள் தப்புவதற்காக மின்சாரம் தாக்கி அவர் இறந்ததுபோல் இருப்பதற்காக உடலை எரித்தது தெரியவந்தது.

மேலும் அவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த குட்டி நாய் ஒன்றையும் மர்மநபர்கள் அடித்துக் கொன்று தூக்கி வீசியுள்ளனர். அந்த நாயும் வீட்டின் அருகே பிணமாக கிடந்தது.

இந்த தகவல் காட்டுத்தீப்போல் பரவியதால் பொதுமக்கள், உறவினர்கள் விரைந்தனர். செய்தியாளர்களும் வந்தபோது அவர்களை கொலை நடந்த வீட்டின் உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகள் குறித்து துப்புதுலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க விடப்பட்டது சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் அதன்பிறகு நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து தடயங்களை சேகரித்தனர்.

சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் மதியம் 1 மணி அளவில் வேன் மூலம் லூர்துமேரி உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

லூர்துமேரி குறித்து அக்கம்பக்கம் வசித்தவர்கள் கண்ணீருடன் கூறுகையில், லூர்துமேரி தனியாக வசித்து வந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அனைவருடனும் அன்பாக பழகி வந்தார். இவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் 8 பேர். இவர்கள் போளூர், வேலூரிலும் சிலர் வெளிநாடுகளிலும் வசித்து வருகின்றனர். மாலை நேரத்தில் அருகிலுள்ள மாதா கோவிலுக்கு லூர்துமேரி தினமும் சென்று ஜெபம் செய்வார். அப்போது அங்குள்ள குழந்தைகளுக்கு பிஸ்கெட், பழங்களை அன்புடன் வாங்கித் தருவார். மேலும் உதவி கேட்டு வருபவர்களுக்கு பணம் வழங்குவார். எங்கு சென்றாலும் வழியில் நின்று அவ்வழியே மோட்டார்சைக்கிள்களில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அனைவருடனும் அன்புடன் பழகி வந்தவர் கொலை செய்யப்பட்டு விட்டாரே என்றனர்.

இது குறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லூர்துமேரி நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவருக்கு வேறு யாருடனாவது முன்விரோதம் இருந்து அதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com