கரூர் அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு போலீசார் விசாரணை

கரூர் அருகே அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது கடத்தல் சிலையா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு போலீசார் விசாரணை
Published on

கரூர்,

கரூர் அருகே ஆத்தூர் பிரிவு ரோடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று காலை வெண்கலத்தினாலான அம்மன் சிலை ஒன்று கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள், உடனடியாக இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் மற்றும் போலீசார் வந்து அந்த சிலையை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட விசாரணையில், 2 அடி உயரமுள்ள அந்த அம்மன் சிலை சுமார் 15 கிலோ எடை இருப்பதாக தெரிய வந்தது. மேலும் கரூர் கோவில்களில் இருந்து கடத்தி வரும் போது, போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்து விவசாய நிலத்தில் மர்ம நபர்கள் வீசி சென்றனரா? அல்லது மாந்திரீகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதற்காக அங்கு சிலையை வைத்துவிட்டு சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்திலுள்ள கோவில் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து, அவற்றை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வரும் வேளையில், கரூர் அருகே சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் கரியமாலீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை சிவனடியார்கள் குழுவினர் கண்டறிந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கோவில் நிலம் ஆக்கிரமிப்பின் போது அந்த அம்மன் வெண்கல சிலையை சம்பந்தப்பட்ட நபர்கள் எடுத்து வைத்து கொண்டு, தற்போது ஆக்கிரமிப்பு தொடர்பான விசாரணைக்கு பயந்து அந்த சிலை வீசப்பட்டிருக்கலாமா? என்கிற விதத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com