

காவிரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது சாப்பர்த்தி ஊராட்சி. இந்த ஊராட்சியில் நேற்று மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி செயலர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் கிராமத்தில் இருந்து சிலர் மட்டும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. கிராம சபை குறித்து தகவலறிந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து வந்த ஊராட்சி உதவி இயக்குனர் சுசிலாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேவகியம்மாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் யசோதா மற்றும் காவேரிப்பட்டணம் போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி செயலர் மீது சரமாரி புகார் தெரிவித்தனர்.
அப்போது கிராம மக்கள் கூறும்போது, இந்த கிராம ஊராட்சி செயலராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார் பல்வேறு முறைகேடு மூலம் சுமார் ரூ.42 லட்சம் வரை கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்காமலும், கணக்கை சமர்பிக்கமாலும் இருந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல், சாலை அமைத்தல், மரம் நடுதல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ததாக கணக்கு எழுதியுள்ளார். ஊராட்சி செயலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சமாதானம் செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தரப்பில் புகார் மனுவை எழுதி வாங்கி அதிகாரிகள், ஊராட்சி செயலர் செந்தில்குமாரிடம் புகார் மனு பெற்றனர். அதில், பொதுமக்கள் நிதி முறைகேடு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதற்கு நான் கடமைப்படுகிறேன் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மக்கள் முற்றுகை, சிறைபிடிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.