

கொடுமுடி,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுள்ளாம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவருடைய மனைவி அருக்காணி (45). 2 பேரும் விவசாய கூலித்தொழிலாளர்கள்.
இவர்களுக்கு மேனகா என்ற மகளும், யுவராஜ், பூபதி என்ற 2 மகன்களும் உள்ளனர். மேனகாவுக்கு திருமணம் ஆகி கொடுமுடியில் உள்ள தனது கணவர் வீட்டுடன் வசித்து வருகிறார். கடந்த 13-ந் தேதி இரவு மேனகா, அவருடைய கணவர் பெருமாள் மற்றும் மகன் வைரமூர்த்தி (13) ஆகியோர் சிட்டாபுள்ளாம்பாளையத்தில் உள்ள ராமசாமியின் வீட்டுக்கு வந்தனர்.
அவர்கள் வரும் வழியில் அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் பெருமாள் மற்றும் மேனகாவை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கைகலப்பு ஆனதில் பெருமாள், மேனகா ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து காயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுபற்றி அறிந்ததும் ராமசாமி, மனைவி அருக்காணி, மகன் யுவராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகள் மற்றும் மருமகனை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்டு உள்ளனர். மேலும் பெருமாள், மேனகாவை தாக்கியவர்களை சரமாரியாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
தகராறு முடிந்ததும் ராமசாமியும் அருக்காணியும் அவர்களுடைய வீட்டுக்கு சென்றனர். யுவராஜ் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
இந்தநிலையில் நள்ளிரவில் ராமசாமியும், அருக்காணியும் வீட்டில் படுத்து அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தனர். அவர்களுடன் மேனகாவின் மகன் வைரமூர்த்தியும் உறங்கினார். நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி அளவில் ராமசாமி மற்றும் அருக்காணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது 2 பேரையும் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ராமசாமியும் அருக்காணியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். வைரமூர்த்தி இந்த தாக்குதலில் இருந்து தப்பித்தார்.
இதுபற்றி அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்து விரைந்து சென்று, கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சற்று தூரம் ஓடி மர்ம நபர்கள் தப்பித்து சென்ற பாதையில் நின்றது. இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிட்டபுள்ளாம்பாளையம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் சிட்டபுள்ளாம்பாளையத்தை சேர்ந்த சுவாமிநாதன் (49), கிருபா சங்கர் (24) என்பதும், அவர்கள் 2 பேர் மற்றும் சுவாமிநாதனின் மகன் சூர்யா (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து ராமசாமி மற்றும் அருக்காணியை வெட்டி கொலை செய்ததும், தெரியவந்து.
மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், ராமசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்களை தாக்கியதாகவும், ஆகவே அவர்களை பழிவாங்கவே ராமசாமியையும், அருக்காணியையும் வெட்டி கொலை செய்ததாகவும், தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பகுதியில் பதுங்கி இருந்த சூர்யாவையும் கைது செய்தனர்.
அதுமட்டுமின்றி மேனகா மற்றும் பெருமாளிடம் தகராறில் ஈடுபட்டதாக தேவகி அம்மாபுரத்தை சேர்ந்த நவீன் (20), சிட்டாபுள்ளாம்பாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம் (21), வெங்காட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜீவானந்தன் (20), அத்திப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி (23), மங்களப்பட்டியை சேர்ந்த மதுசூதனன் (20) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.