கோத்தகிரி அருகே, பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி

கோத்தகிரி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியானார்.
கோத்தகிரி அருகே, பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியை சேர்ந்தவர் காஜா உசேன்(வயது 42). அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பவீனா(35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவீனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக கோத்தகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் அனுமதித்தனர். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு பவீனா கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது, பவீனாவுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பவீனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் குமாரசாமி, மேற்பார்வையாளர் சந்திரன் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் கன்னேரிமுக்கு பகுதிக்கு சென்று சுகாதார பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதேபோன்று பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்த பவீனாவின் வீட்டிலும் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினருக்கு பன்றி காய்ச்சல் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். தொடர்ந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் அனைத்து விதமாக காய்ச்சல்களுக்கும் மருந்து உள்ளது. எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் தாமதிக்காமல் உரிய சிகிச்சை பெறுவது அவசியம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com