கோவில்பட்டி அருகே திருநங்கைகளுக்கு பசுமை வீடு கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்

கோவில்பட்டி அருகே திருநங்கைகளுக்கு பசுமை வீடு கட்டும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
கோவில்பட்டி அருகே திருநங்கைகளுக்கு பசுமை வீடு கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் 30 திருநங்கைகளுக்காக தலா ரூ.2.10 லட்சத்தில் பசுமை வீடும், தலா ரூ.1.18 லட்சத்தில் மாட்டு கொட்டகையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதிக்கு அருகே மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு தலா ரூ.2.10 லட்சத்தில் 10 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இதுதவிர அங்கு ரூ.45 லட்சத்தில் தார்ச்சாலை, வாறுகால், குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை நேற்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

கோவில்பட்டியில் உள்ள 30 திருநங்கைகளுக்கு வீடு வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. இதற்கான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. விரைவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் திறப்பு விழா நடைபெறும். மேலும் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக பால் பண்ணையும் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக ஒவ்வொரு திருநங்கைக்கும் மாடு வாங்க கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 25 மாடுகள் வாங்கி உள்ளனர். இவர்கள் 30 பேரும் சேர்ந்து ஆவின் மூலம் பால் கூட்டுறவு சங்கம் அமைத்துள்ளனர். இங்குள்ள மாடுகள் தினமும் தலா 7 முதல் 10 லிட்டர் வரை என மொத்தம் 300 லிட்டர் பால் கொடுக்கிறது. பால் உடனடியாக ஆவினுக்கு விற்பனை செய்யப்பட்டு, வாரந்தோறும் திருநங்கைகளுக்கு பணம் வழங்கப்படுகிறது.

தற்போது அவர்கள் மாடுகள் பராமரிப்பை பொறுத்து, 2-வதாக மாடுகள் வாங்க மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ஏற்பாடுகள் செய்கிறோம். அடுத்தகட்டமாக இன்னும் அவர்கள் அதிகமாக வருமானம் ஈட்ட, மெயின் பஜார் பகுதியில் கடை அமைத்து பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி, உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத்தலைவர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் தமிழ்ச்செல்வன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரகோமதி, உதவி பொறியாளர் ரெஜினால்ட், மந்தித்தோப்பு ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com