கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் ஆக்கிரமிப்பில் ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 19 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட கோரி இந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்படும் என கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகள் அறிவித்தப்படி நேற்று தொழிற்சாலை முன்பு பொக்லைன் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டதே தவிர ஆக்கிரமிப்புகளை அகற்றும் எந்த வித நடவடிக்கைகளும் அங்கு தொடங்கப்படவில்லை.

இதனையறிந்த கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர் தலைமையில் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அறிவித்தப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிட அதிகாரிகள் முன்வரவேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.

மேலும் தங்கள் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்டு அவற்றை பொதுமக்களின் நலதிட்டங்களுக்காக பயன்படுத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் செந்தாமரை செல்வி, ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தொழிற்சாலை நிர்வாகத்தினர், தங்களது ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை குத்தகைக்கு கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு செய்து உள்ளதாக தெரிவித்தனர்.

இதனை உறுதி செய்துகொண்டு அதற்கு பின்னர் தான் வருகிற 4-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறும் என்றும் இதற்கிடையில் கிராம பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்கும்படி தாசில்தார் செந்தாமரைசெல்வி கூறினார். இதனையடுத்து கிராம மக்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com