குன்றத்தூர் அருகே ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை

குன்றத்தூர் அருகே ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
குன்றத்தூர் அருகே ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை
Published on

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், பாரதியார் நகர் மெயின் ரோடு பகுதியில் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒருவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது மர்ம கும்பல் திடீரென்று வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து அந்த நபர் ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் குன்றத்தூரை அடுத்த கெலட்டிப்பேட்டை, நாகரத்தினம் பிள்ளை தெருவை சேர்ந்த பாபு என்ற போகபதி பாபு (வயது 42) என்பது தெரியவந்தது. இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தி.மு..க பிரமுகரான கிரிராஜனின் உறவினர் பாபுவின் மகளை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. மகளின் சீமந்தம் குறித்து பேச வேண்டுமென கிரிராஜனை வரவழைத்த பாபு, அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

இந்த வழக்கில் பாபு உள்ளிட்ட சிலரை குன்றத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த பாபு தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

கிரிராஜன் கொலை செய்யப்பட்டு கடந்த மாதத்துடன் ஓராண்டு முடிவுற்றது. தற்போது சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவாக இருந்து வந்த பாபு இங்கு நண்பரை பார்க்க வருவதை கண்காணித்து நேற்று பழிவாங்கும் விதமாக பாபுவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். மேலும் கிரிராஜன் கொலை செய்யப்பட்ட தெருவுக்கு பக்கத்து தெருவில் பாபு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாபுவின் மருமகன் மோகன் இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே பாபுவை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தி.மு.க. பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்துள்ளதாக கருதப்படுகிறது.

அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com