மகேந்திரமங்கலம் அருகே, 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; 2 ஆசிரியர்கள் கைது

மகேந்திரமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். மாணவிக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மகேந்திரமங்கலம் அருகே, 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; 2 ஆசிரியர்கள் கைது
Published on

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே ஒரு அரசு பள்ளியில் வரலாறு பாட ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் லட்சுமணன் (வயது 38), சின்னமுத்து (34). இவர்கள் இருவரும் அரூர் பகுதியில் இருந்து பள்ளிக்கு வந்து பணிபுரிந்து வருகிறார்கள். சில நேரங்களில் குடிபோதையிலும் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிரியர்கள் லட்சுமணன், சின்னமுத்து ஆகியோர் அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். மாணவியின் செல்போனுக்கு காதல் கவிதைகள், ஆபாச வார்த்தைகள், ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளனர். இதனை அறிந்த அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

இதன்பின்னர் ஆசிரியர்கள் 2 பேரும், அந்த மாணவியை மிரட்டி உள்ளனர். இதுபற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் உன் வாழ்க்கையை சீரழித்து விடுவோம், மதிப்பெண்களை குறைத்து விடுவோம் என கூறியுள்ளனர். இதனால் அந்த மாணவி பாலியல் தொல்லை குறித்து வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் இருவரும் மாணவியிடம் எல்லை மீறி நடக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மாலையில் பள்ளி வகுப்பு நேரம் முடிந்ததும் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி அழுது உள்ளார்.

இந்த சம்பவம் ஊர் மக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை 10.30 மணியளவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு பள்ளிக்கு சென்று ஆசிரியர் களிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததால் சரியான பதில் கூறவில்லை என தெரிகிறது. இதனால் தலைமை ஆசிரியர் முருகேசனிடம் சென்று முறையிட்டனர். தலைமை ஆசிரியர் முருகேசன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். ஆனால் தலைமை ஆசிரியரும் சரியான பதில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து 2 ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கினர்.

இதை அறிந்ததும் மகேந்திரமங்கலம் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். பின்னர் ஆசிரியர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதன்பின்னரும் ஆத்திரம் தணியாத பொதுமக்கள் திரண்டு சென்று மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்கினால் தான் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என கூறி போராட்டம் நடத்தினர். அப்போது பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நடந்த சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவி பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணனிடம் கேட்டபோது, பள்ளியில் நடந்த சம்பவம் பற்றி விசாரித்து வருகிறோம். 2 ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com