மஞ்சூர் அருகே: காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்

மஞ்சூர் அருகே காட்டெருமை தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.
மஞ்சூர் அருகே: காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்
Published on

மஞ்சூர்,

மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகின்றன. இங்கு வாழும் காட்டுயானை, காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலை தோட்டங்களிலும் முகாமிட்டு வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது.

குறிப்பாக தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் மேய்ச்சலில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் மஞ்சூர் அருகே உள்ள தாய்சோலையில் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு காட்டெருமை வந்தது. இதை பார்த்ததும் தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு தங்களது குடியிருப்புகளுக்கு ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் துரத்தி சென்ற காட்டெருமை, தனமந்தோரையை சேர்ந்த புட்டுமாதி(வயது 54) என்பவரை முட்டி தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து காட்டெருமை அங்கிருந்து வனப்பகுதியை நோக்கி சென்றது.

பின்னர் படுகாயம் அடைந்த புட்டுமாதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com