மரக்காணம் அருகே பரிதாபம்: குடும்பத்துடன் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி பலி - தாய், மற்றொரு மகள் கவலைக்கிடம்

மரக்காணம் அருகே குடும்பத்துடன் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி பலியானார். தாய், மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மரக்காணம் அருகே பரிதாபம்: குடும்பத்துடன் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி பலி - தாய், மற்றொரு மகள் கவலைக்கிடம்
Published on

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே செட்டிக்குப்பம் சேர்ந்தவர் குமார் விவசாயி(வயது43). இவரது மனைவி கவிதா (38). இவர்களுக்கு மகாலட்சுமி(17) கோமதி(14) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மகாலட்சுமி பிளஸ்-2வும், கோமதி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்தநிலையில் குமாருக்கும் அவரது மனைவி கவிதாவுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த கவிதா, தனது மகள்களுடன் வீட்டில் விவசாயப் பயிர்களுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு 3 பேரும் வீட்டுக்குள் படுத்துக் கொண்டனர்.

காலையில் நீண்டநேரமாகியும் எழுந்திருக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த குமார், மனைவி, மகள்கள் தூங்கச் சென்ற அறைக்கு சென்று பார்த்தார் அப்போது அவரது மனைவி மற்றும் மகள்கள் வாயில் நுரைதள்ளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அலறியடித்துக் கொண்டு தனது உறவினர்களை உதவிக்கு அழைத்து அவர்கள் 3 பேரையும் அங்கிருந்து மீட்டு புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குமார் சேர்த்தார். அங்கு 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலனளிக்காமல் பிளஸ்-2 மாணவியான மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கவிதா, கோமதி ஆகியோருக்கு தொடர்ந்து அதே மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பப் பிரச்சினையில் மகள்களுடன் தாய் விஷம் குடித்த சம்பவம் மரக்காணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com