மரக்காணம் அருகே, பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை

மரக்காணம் அருகே நடைபெற்ற பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியின்போது கடலில் பஸ்சை இறக்கி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மரக்காணம் அருகே, பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
Published on

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் தேசிய பேரிடர் மேலாண்மை குழு, தீயணைப்புத் துறை, காவல்துறை சார்பில் பேரிடர் நிவாரண செயல்முறை விளக்க ஒத்திகை நிகழ்ச்சி மரக்காணம் அருகே அழகன்குப்பம், எக்கியார்குப்பம் கிராமங்களில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒத்திகை நிகழ்ச்சியில் அழகன்குப்பம் கிராம முகத்துவார பகுதியில், வெள்ளத்தில் 30 பயணிகளுடன் சிக்கிக்கொண்ட பஸ்சை முதல் பொறுப்பாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் மூலம் மீட்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது. இதற்காக கடலின் முகத்துவார பகுதியில் பஸ் இறக்கப்பட்டு, அதிலிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்து தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கால்நடைகளை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பது போன்ற ஒத்திகையும், 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் செல்போன் கோபுரம் சாய்ந்து விழுந்து தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டால், மற்றவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது, சாலைகளில் மரங்கள் விழுந்து நகரத்துடன் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் கிராம மக்களை படகுகளை கொண்டு எவ்வாறு மீட்பது என்பது பற்றி பேரிடர் மீட்பு குழுவினர் செயல்விளக்கம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து எக்கியார்குப்பம் புயல் பாதுகாப்பு மையத்தில் வைத்து, பேரிடர் காலத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, அதில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது, தாழ்வான பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து அதில் மாட்டிக்கொண்டவர்களை படகுகள் உதவியுடன் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்வது, தீ விபத்தில் சிக்கிக்கொண்ட 25 நபர்களை எவ்வாறு காப்பாற்றுவது, உயரமான கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பது என தீயணைப்புத் துறையினர் கிராம மக்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

மேலும் பேரிடரில் சிக்கி இறந்த விலங்குகளினால் எந்தவித நோய் தொற்றும் பரவாமல், அவற்றை அப்புறப்படுத்துவது குறித்து கால்நடை துறையினர் மூலம் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியால் அழகன்குப்பம், எக்கியார்குப்பம் கிராமங்கள் பரபரப்பாக காணப்பட்டன.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் துணை கலெக்டர்கள் கவிதா (விழுப்புரம்), விஷ்ணு பிரியதர்ஷினி (விழுப்புரம்), விஷ்ணுவர்தனி (திருப்பூர்), உதவி இயக்குனர்கள் (ஊராட்சிகள்) ரத்தினமாலா (கள்ளக்குறிச்சி), ஜோதி (விழுப்புரம்) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com