மார்த்தாண்டம் அருகே பரபரப்பு: பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து மாணவிகளுக்கு அரிவாள் வெட்டு - அரசு பஸ் டிரைவர் கைது

பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து மாணவிகள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மார்த்தாண்டம் அருகே பரபரப்பு: பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து மாணவிகளுக்கு அரிவாள் வெட்டு - அரசு பஸ் டிரைவர் கைது
Published on

அருமனை,

மார்த்தாண்டம் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அருமனை பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. நேற்று காலை 7 மணி அளவில் இந்த பள்ளிக்கூடத்துக்குள் ஒருவர் அரிவாளுடன் புகுந்தார். அவர் வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகளை அரிவாளால் சேதப்படுத்தினார். மேலும் பள்ளிக்கூட வளாகத்தில் இருந்த தாளாளர் வீட்டுக்குள் புகுந்த அந்த நபர், அங்கிருந்த டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினார்.

பள்ளிக்கூட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 வேன்களின் கண்ணாடிகளையும் அரிவாளால் உடைத்தார். மேலும் பள்ளிக்கூடத்துக்கு வந்து இருந்த மாணவிகள் 2 பேரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட அந்த நபரை பிடிக்க அதே பகுதியை சேர்ந்த 2 பேர் முயன்றனர். அவர்களையும் அந்த நபர் அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது.

இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அந்த நபரை மடக்கி பிடித்து அருமனை போலீசில் ஒப்படைத்தனர். அரிவாள் வெட்டில் 2 மாணவிகள் உள்பட அதே பகுதியை சேர்ந்த ஞானமுத்து (60), சுதிர்(52) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட நபர் சிதறாலை சேர்ந்த ஜெயன் என்பதும், அரசு பஸ் டிரைவரான இவர், குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய மேல் விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு:-

ஜெயனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஜெயனின் மனைவி சம்பவம் நடந்துள்ள பள்ளிக்கூடத்தில் தான் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவருடைய பிள்ளைகளும் அதே பள்ளிக்கூடத்தில் தான் படித்து வருகின்றனர்.

ஜெயனுக்கும் அவருடைய சகோதரி ஜெயஸ்ரீக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறதாம். இந்த பிரச்சினையில் பள்ளிக்கூட தாளாளர் ஜெயஸ்ரீக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது. இதனால் ஜெயன் ஆத்திரம் அடைந்தார். இதனால் தான் நேற்று காலையில் மதுபோதையில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதுடன், 4 பேரை அரிவாளால் வெட்டியதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அருமனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com