மயிலாடும்பாறை அருகே சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும்

மயிலாடும்பாறை அருகே சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மயிலாடும்பாறை அருகே சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும்
Published on

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே வாய்க்கால்பாறை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யானைகஜம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. மழை பெய்யும் நேரங்களில் யானைகஜம் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டு தடுப்பணையில் நீர் நிரம்பி காணப்படும். எனவே தடுப்பணையை சுற்றியுள்ள தோட்ட கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படும்.

அதேபோல வாய்க்கால்பாறை கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணையில் சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியாக நீர் கசிந்து வந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தடுப்பணையை சீரமைக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே விரிசல் நாளுக்கு நாள் அதிகமாக தொடங்கியது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யானைகஜம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து தடுப்பணையின் பெரும்பாலான பகுதி இடிந்து விழுந்தது. தற்போது வரை இந்த தடுப்பணை சீரமைக்கப்படவில்லை. எனவே மழை பெய்து யானைகஜம் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டும், விவசாயிகளுக்கு பலனளிக்காமல் நேராக வைகை ஆற்றில் கலக்கிறது. தடுப்பணை சேதமடைந்து காணப்படுவதால் வெயில் காலங்களில் வாய்க்கால்பாறை பகுதியில் உள்ள தோட்ட கிணறுகளில் நீர் முழுவதுமாக வற்றி விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்கால்பாறை கிராமத்தில் யானைகஜம் ஆற்றின் குறுக்கே சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com