மீஞ்சூர் அருகே விவசாயியை வழிமறித்து அரிவாள் வெட்டு - தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு

மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை, வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
மீஞ்சூர் அருகே விவசாயியை வழிமறித்து அரிவாள் வெட்டு - தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு
Published on

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ரெட்டிபாளையம், வேலூர், மனோபுரம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் ஆலாடு தத்தைமஞ்சி சாலை உள்ளது. இந்த சாலை ஆரணி ஆற்றங்கரையை ஒட்டி உள்ள நிலையில், இப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்றிரவு காட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியான அருள் (வயது 40) என்பவர் பொன்னேரியில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணி ஆற்றங்கரை பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அருளை வழிமறித்து தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதைக் கண்டு பதறிப்போன அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றார். ஆனால் அந்த கும்பல் அருளை துரத்தி சென்று மடக்கி, பணம் கேட்டு மிரட்டியது. அவர் கொடுக்க மறுக்கவே மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து, அருளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராம பொதுமக்கள் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த அவரை மீட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தி தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இதே சாலையில் ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரை மிரட்டி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பணம் பறிக்க முயன்ற போது, பொதுமக்கள் வந்ததால் தப்பி சென்றது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com