

மேலூர்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினரும், கண்காணிப்பு குழுவினரும் மதுரையில் மாவட்ட எல்லை பகுதிகள், சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.5 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மேலூரை அடுத்த கத்தப்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த லாரியில் எந்தவிதமான ரசீதும் இன்றி வந்த 6 பார்சல்கள் இருந்தன. அதில் ஒரு பார்சலை பிரித்து பார்த்தபோது நகைகள் இருந்தன. அவை தங்கமாக இருக்குமா என்ற சந்தேகத்தின்பேரில், உடனே அந்த லாரியை மேலூர் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மேகலா, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தன் ஆகியோர் மேல் விசாரணைக்காக மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு சோதனை செய்தபோது கன்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட நகைகள் கவரிங் என்பது தெரியவந்தது. இருப்பினும் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.