மோகனூர் அருகே விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை

மோகனூர் அருகே விவசாய நிலத்தில் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலைக்கு கிராமமக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள்.
மோகனூர் அருகே விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை
Published on

மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பரளி ஊராட்சி. இங்குள்ள செல்லாண்டியம்மன் கோவில் முன்புறம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியில் கற்சிலை ஒன்று கவிழ்ந்த நிலையில் நீண்ட நாட்களாக கிடந்தது.

நேற்று முன்தினம் அந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த ரங்கப்பன் மகன் சின்னுசாமி (வயது 52) என்பவர் அந்த சிலையை திருப்பி போட்டு உள்ளார். அந்த சிலை புத்தர் சிலை போல் இருப்பதாக கருதிய சின்னுசாமி இதுகுறித்து அந்த ஊர் தர்மகர்த்தா சிங்கையினிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் கிராம நிர்வாக அலுவலர் நவீனானுக்கு கொடுத்த தகவலின்பேரில் மோகனூர் தாசில்தார் கதிர்வேல், மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், வளையபட்டி வருவாய் ஆய்வாளர் ரகமத்உன்னிசா பேகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த சிலையை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் திடீரென சிலையை பார்த்ததும் கிராமமக்கள் அந்த சிலையை அதே இடத்தில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த நல்லமாறக்கவுண்டர் என்பவரின் மகன் சின்னுசாமி (72) கூறும்போது, இந்த சிலை நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே இங்கு தான் கிடந்தது. அதை நாங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது சிலையை திருப்பிப் பார்த்தபோது புத்தர் சிலை போன்று இருந்தது. சிலை 3 அடி உயரத்திலும், 2 அடி அகலத்திலும், அமர்ந்தபடி தியானம் செய்யும் நிலையில் உள்ளது, என்றார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், புத்தர் சிலையை கண்டெடுத்து உள்ளோம். இதுபற்றி தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளோம். அந்த துறையினர் வந்து சிலை பற்றி தெரிவிப்பார்கள், என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com