நாமக்கல் அருகே சீரான குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலைமறியல் - 44 பேர் கைது

நாமக்கல் அருகே சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் அருகே சீரான குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலைமறியல் - 44 பேர் கைது
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பொட்டணம் புதூர் கிராமம். இங்குள்ள அருந்ததியர் தெருவில் 250-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிணற்றை தனிநபர் ஒருவர் சில வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து, அவரது கட்டுபாட்டில் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரின்பேரில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் கிணற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடக்கோரியும், சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தியும் நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தேசிய நெடுஞ்சாலையில் ஆதி தமிழர் பேரவையினர், கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நல்லிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 44 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் வாகனங்கள் மாற்றுச்சாலையில் திருப்பி விடப்பட்டன. சாலைமறியலால் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com