நெல்லை அருகே அம்பேத்கர் படம் அவமதிப்பு பொதுமக்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு

நெல்லை அருகே அம்பேத்கர் படம் அவமதிப்பு செய்யப்பட்டது. இதை கண்டித்து அந்த பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நெல்லை அருகே அம்பேத்கர் படம் அவமதிப்பு பொதுமக்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு
Published on

நெல்லை,

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள சேந்திமங்கலம் பெருமாள் கோவில் தெரு பகுதியில் ஒரு பீடம் உள்ளது. அந்த பீடத்தில் அம்பேத்கர் படம் மற்றும் சமுதாய தலைவர்களின் படம் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பகுதியில் தெருவிளக்குகள் மற்றும் வீட்டு விளக்குகளுக்கு மின்சாரம் தடைபட்டு இருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அம்பேத்கர் படம் மற்றும் சமுதாய தலைவர்களின் படங்களை அவமதிப்பு செய்து விட்டு தப்பி சென்றனர்.

நேற்று காலையில் இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் அணைக்கப்பட்டு இருந்தது. இதை பற்றி அந்த ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. ஏராளமான பொதுமக்கள் பீடம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அம்பேத்கர் மற்றும் சமுதாய தலைவர்கள் படங்களை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர்கள் சீதாலட்சுமி, சோமசுந்தரம் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். அவமதிப்பு செய்யப்பட்ட தலைவர்களின் படங்களை சுத்தம் செய்து அதே இடத்தில் வைத்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் சேந்திமங்கலத்தில் மற்றொரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த மற்றொரு சமுதாய தலைவரின் படம் அவமதிப்பு செய்யப்பட்டது. தற்போது அந்த பகுதியில் அம்பேத்கர் மற்றும் சமுதாய தலைவர்கள் படம் அவமதிப்பு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com