நெல்லை அருகே வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை: தலைமறைவான 12 பேர் கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்

நெல்லை அருகே வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான 12 பேர் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை அருகே வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை: தலைமறைவான 12 பேர் கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்
Published on

நாங்குநேரி,

நெல்லை அருகே நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் அருணாசலம் மனைவி சண்முகத்தாய் (வயது 45). அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி சாந்தி (40). உறவினர்களான இவர்கள் 2 பேரும் அங்கன்வாடி பணியாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 பேர் கொண்ட கும்பல் சண்முகத்தாயின் வீட்டுக்கும், சாந்தியின் வீட்டுக்கும் அடுத்தடுத்து சென்றனர். அங்கு நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் சண்முகத்தாய், சாந்தி ஆகிய 2 பேரையும் படுகொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக்கொலை குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட சண்முகத்தாயின் மகன் நம்பிராஜன், அப்பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் மகள் வான்மதியை காதலித்து திருமணம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வான்மதியின் குடும்பத்தினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லையில் நம்பிராஜனை கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக நாங்குநேரியில் ஓட்டல் நடத்திய ஆறுமுகம், அவருடைய உறவினரான சுரேஷ் ஆகிய 2 பேரும் கடந்த மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கில் கைதான அருணாசலம் மகன்கள் ராமையா, கட்டசங்கர், சுப்பையா மகன் இசக்கிபாண்டி மற்றும் வானுமாமலை ஆகிய 4 பேரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதியதால், அவர்களை போலீசார் பாதுகாப்புடன் வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

இந்த நிலையில் ஜாமீனில் வந்த ராமையா உள்ளிட்ட 4 பேரையும் தீர்த்து கட்டுவதற்காக, நேற்று முன்தினம் மறுகால்குறிச்சிக்கு வந்த கும்பல், அங்கு அவர்கள் இல்லாததால், சண்முகத்தாய், சாந்தி ஆகியோரை படுகொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் செல்லத்துரை, சிவசுப்பு, பெருமாள் மகன்கள் முருகன், செல்வம், மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த மாடசாமி, தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன், முத்துப்பாண்டி, முத்து உள்ளிட்ட 12 பேர் மீது கொலை, வெடிகுண்டு வீசுதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவான 12 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக, நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசா ஸ்டெபிலா தெரசா மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com